சூரி கொடுத்த புகார்… விசாரிக்க மறுத்த நீதிபதி

0
17

பிரபல நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி கொடுத்த புகாரை நான் விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி கொடுத்த புகாரின் அடிப்படையில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீ சார் விசாரித்து வருகின்றனர். மோசடி வழக்கில் தங்களை போலீசார் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் ரமேஷ் குடவாலா, அன்புவேல்ராஜன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்றும், இதுகுறித்து மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் சூரி தரப்பு வக்கீல் முறையிட்டார். அதேபோல, போலீஸ் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கைதான் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து அவர் விலகி கொண்டார்.