சூறாவளியாக உருவெடுக்கும் தாழமுக்கம்… வட மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை..!

0
473

வங்களா விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள மிக வலுவான தாழமுக்கமானது திருகோணமலை கரையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 280 கிலோமீற்றர் தொலைவில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கம், இலங்கையின் வட கிழக்கு கரையோர பிரதேசத்திற்கு அண்மையாக தமிழத்தின் கரையோர பிரதேசத்தை நோக்கி நகர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களத்தின் தகவலின் அடிப்படையில்

தாழமுக்கத்தின் நகர்வு காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை காற்று வீசலாம்.

வடக்கின் பல பகுதிகளில் இன்று 100 – 150 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாண தீபகற்பத்தில் 150 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினம் பதிவாகும் மழை வீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சில கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன், மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் கடற்றொழில் நடவடிக்கையை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வலுவான தாழமுக்கமானது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, சூறாவளியாக விருத்தியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின்னரான 12 மணித்தியாலங்களில் அந்த சூறாவளியானது மேலும் தீவிரமடைந்து மிகப்பலத்த சூறாவளியாக மாற்றமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியானது அடுத்த 48 மணித்தியாலங்களில் வட மேற்கு திசையின் ஊடாக தமிழகத்தின் கரையை ஊடரத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரியவருகிறது.