சூறாவளி எச்சரிக்கை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

0
998

சீரற்ற காலநிலைக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் டிசம்பர் 02, 03 மற்றும் 04 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அடுத்த சில நாட்களுக்கு வட அகலாங்குகள் 05N – 12N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 82N – 92N இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் மணித்தியாலங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, சடுதியாக அதிகரிக்கும் காற்று, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

இலங்கைக்கு கிழக்காக உள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் (05N – 12N, 82E – 92E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் மேற்கண்ட திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.