ஜனாதிபதி கோட்டபாய கடுமையான உத்தரவு

0
25

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் செல்லவோ அங்கிருந்து வெளியேறவோ எவருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்வோர் சரியான முறைகளை பின்பற்றுகிறார்களா என்பது பற்றி தொடர்ந்தும் கவனம் செலுத்துவது அவசியமாகும். இவ்வாறான பிரதேசங்களுக்குள் செல்லவோ அங்கிருந்து வெளியேறவோ எவருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

மேல் மாகாணத்திலிருந்து ஏனைய இடங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொவிட் வைரஸ் பரவலை தடுக்கும் செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி இது பற்றி கருத்து வெளியிட்டார்.

தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் இடம்பெற்ற 90 சதவீதமான கொரோனா மரணங்கள் தொற்றா நோய்களுடன் தொடர்புபட்டவையாகும். மாரடைப்பு, சிறுநீரக நோய், நீரிழிவு. தொற்று நோய் என்பனவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு துரிதமாக கொரோனா தொற்று ஏற்படுகிறது. பெரும்பாலானவர்கள் நோய்க்கான அடையாளம் இன்றி மரணமடைந்துள்ளார்கள். மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைகளின் மூலம் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.

கொவிட்-19 வைரஸ் பரவல், அதனை கட்டுப்படுத்தல் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய வைரஸ் பரவல்கள் மக்களின் சுகாதார பாதுகாப்பு உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பிராந்திய மருந்தகங்களை துரிதமாக செயற்பாட்டு ரீதியில் முன்னெடுத்துச் செல்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்