மகேந்திர சிங் டோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் புகழாரம்

0
13

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனி அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

‘டோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது’; ‘ஒரு சகாப்தம் முடிந்தது’; என்று மகேந்திர சிங் டோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

கடந்த 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த டோனி இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தது உட்பட பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார்.

அணித் தலைவராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட அவரது தலைமையில் இந்தியா உலகின் முன்னணி அணியாகத் திகழ்ந்தது.

இந்திய அணியில் இடம்பெற்ற முதல் அதிரடி பேட்ஸ்மேனாக உருவெடுத்த டோனி 2007ஆம் ஆண்டு அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். முதல் ஆண்டிலேயே இவரது தலைமையின் கீழ் ‘டி20’ உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றது.

அனைத்துலக கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மூன்று விதமான உலகக் கிண்ணப் போட்டிகளிலும் வென்ற ஒரே அணித்தலைவர் எனும் பெருமையைப் பெற்றவரும் டோனி ஆவார்.

200 ஒருநாள் போட்டிகளிலும், 60 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ள டோனி, 72 ‘டி20’ போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார்.

இறுதிப் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணித்தலைவர், இந்திய அணிக்கு 110 ஒருநாள் போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்த அணித்தலைவர், அதிக போட்டிகளில் ஆட்டம் இழக்காதவர் எனும் பெருமைகளும் டோனிக்கு உண்டு.

மேலும், அனைத்துலகப் போட்டிகளில் அதிக ‘ஸ்டம்ப்பிங்’ செய்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டோனி நேற்று எளிமையான விதத்தில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

எனினும் ஐபிஎல் உள்ளிட்ட இதர போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பல ரசிகர்கள் அவர்களின் உணர்வுபூர்வ கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.