தல டோனி குறிப்பிட்ட 1929 என்பதன் உண்மையான அர்த்தம் இதுதானா? கண்கலங்கும் ரசிகர்கள்

  0
  518

  எமது தளத்தில் புதிய விடயங்களை அறிந்துகொள்ள நாள் ஒன்றிற்கு ஒரு தடவையாவது விஜயம் செய்யுங்கள்

  தோனி ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சூசகமாக அறிவித்தார்.

  தோனி வெளியிட்ட பதிவில் 1929 மணியில் இருந்து நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள் என கூறி இருந்தார். ஆகஸ்ட் 15 அன்று இரவு 7.29 மணிக்கு ஓய்வு பெறுவதையே தோனி அப்படி குறிப்பிட்டார் என பலரும் கருதிய நிலையில், அதன் உண்மையான அர்த்தம் தெரிய வந்துள்ளது.

  தோனி கடைசியாக 2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் ஆடி இருந்தார். அந்த போட்டி ஜூலை 10, 2019 அன்று நடந்தது. அதன் பின் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்திய அணியை விட்டு விலகியே இருந்த தோனி 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வந்தார்.

  சென்னையில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தோனி வந்தார். ஆகஸ்ட் 15 அன்று பயிற்சி துவங்கிய நிலையில், தோனி அன்றைய தினம் இரவு 7.29 மணிக்கு இன்ஸ்டாகிராமில் தான் ஓய்வு பெறுவதாக சூசகமாக அறிவித்தார்.

  தோனி தன் பதிவில், “இத்தனை காலமும் நீங்கள் அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றிகள் பல. 1929 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள்”என கூறி இருந்தார். தோனி கூறிய 1929 மணி என்பது என்ன என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

  தோனி சரியாக 7.29 மணிக்கு இன்ஸ்டாகிராமில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதை தான் அவ்வாறு கூறினார் என பலரும் கூறி வந்தனர். ஆனால், உண்மையில் அதன் அர்த்தம் இந்தியா – நியூசிலாந்து உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த அந்த நிமிடம் தான்.

  2019 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி மழை காரணமாக இரண்டு நாட்கள் நடந்தது. ரிசர்வ் நாளான இரண்டாம் நாளில் தோனி இந்தியா சேஸிங்கின் போது விக்கெட்களை இழந்து தடுமாறியது. தோனி ரன் அவுட் ஆன போதே இந்திய அணியின் தோல்வி உறுதியானது. அந்தப் போட்டி சரியாக 7.29க்கு முடிவுக்கு வந்தது.

  தோனி அந்தப் போட்டியுடன் ஓய்வு பெறுவார் என அப்போதே கூறப்பட்டது. ஆனால், தோனி ஓய்வு அறிவிப்பை அப்போது வெளியிடவில்லை. தோனி ஓய்வு அறிவித்து விட்டார், அறிவிக்கப் போகிறார் என அதன் பின் பல முறை வதந்திகள் கிளம்பின.

  வதந்திகள் கிளம்பிய போதெல்லாம் தோனி ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தோனி குறித்த பதிவுகளை வெளியிட்டு அதை டிரென்டிங் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். பலர் தோனி மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் என அவருக்கு ஆதரவாக கூறி வந்தனர்.

  இவை அனைத்தையும் தன் ஓய்வு அறிவிப்பில் சூசகமாக குறிப்பிட்டுள்ளார் தோனி. அவரது அறிவிப்பில் இந்தியா – நியூசிலாந்து அரை இறுதிப் போட்டி முடிந்த 7.29 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள் என்றே குறிப்பிட்டுள்ளார்.

  அதே போல, இத்தனை காலமும் ரசிகர்கள் அளித்த அன்புக்கு நன்றி என அவர் கூறி உள்ளது அந்த நேரத்தில் இருந்து தனக்கு ரசிகர்கள் அளித்து வந்த அன்புக்கு நன்றி என்று கூறுவது போலவே அமைந்துள்ளது. இதைத் தான் தோனி குறிப்பிட்டுள்ளார் என அறிந்த ரசிகர்கள் சிலர் உருக்கமாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

  தோனி வெளியிட்டுள்ள வீடியோவிலும் இறுதியில் உருக்கமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.