நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்சாரத்தடை… வெளியானது அட்டவணை

0
72

இன்று தொடக்கம் அமுல்க்கு வரும் வகையில் நான்கு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, ஒரு வலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்றைய வலையத்தில் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையும், மற்றுமொரு வலையில் இரவு 8 மணிமுதல் இரவு 9 மணி வரையும் நான்காவது வலையத்தில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நுரைச்சோலை மின் ஆலையில் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் வரையில் மின் துண்டிப்பை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, மின்சார வினியோகத்திற்கான நாளாந்த கேள்விக்கு அமைய தேவையேற்பட்டால் மாத்திரம் பகல் நேரங்களிலும் வலையங்களுக்கு அமைய மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என மின்சார சபை அறி்க்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நான்கு வலையங்களிலும் முற்பகல் 10 மணி முதல் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் வீதம் பிற்பகல் 5.00 மணி வரை மின்சார துண்டிக்கப்படும்.

அதன்படி, முற்பகல் 10 மணி முதல் 11.45 வரையும், முற்பகல் 11.45 மணிமுதல் மதியம் 1.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரையும் மற்றும் பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.