நான் இன்று அங்கு இல்லை என்பது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று – சுரேஷ் ரெய்னா

  0
  9

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  அபுதாபி:
  13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
  அபிதாபியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது.
  சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறாததால், டோனி எத்தனையாவது வீரராக களம் காண்பார் என்பது பற்றிய விவாதங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  அந்த பதிவில் அவர், “நான் இன்று மைதானத்தில் இல்லை என்பதை நம்பமுடியவில்லை என்றாலும் எனது வாழ்த்துக்கள் உங்களுடன் இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வாழ்துக்கள்” என்று கூறியுள்ளார்.