நாயிடம் நீண்ட நேரம் போராடி தங்கையை மீட்ட வீரச் சிறுவன்..!!

0
14

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுவன் உயிரைப் பணயம் வைத்து தன் தங்கையின் உயிரைக் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அமெரிக்காவின் வயோமிங் (Wyoming) மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்ஜர் வோல்கர் என்ற 6 வயதுச் சிறுவன், தன் தங்கையைக் கடிக்க வந்த நாயைத் தடுத்து தங்கையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அப்போது சிறுவனின் கழுத்து மற்றும் முகத்தில் பல முறை நாய் கடித்துள்ளது.இதனால், அந்தச் சிறுவனுக்கு சுமார் 90 தையல்கள் போடப்பட்டுள்ளது.

மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, தற்போது நலமாக இருக்கும் சிறுவனைப் பற்றி அத்தை நிக்கி வோல்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவம் நிக்கியின் பதிவுக்குப் பிறகு தற்போது பெரும் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், “எங்கள் சிறிய ஹீரோ அவரின் விருப்பமான பல ஹீரோக்களிடமிருந்து சில ஊக்கம் மிகுந்த வார்த்தைகளைப் பெற விரும்புவார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, இந்தக் கதையை அனைவரும் தயவு செய்து பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.

ஜூலை 9ஆம் திகதி என் 6 வயது மருமகன் பிரிட்ஜர், தன் குட்டி சகோதரியைக் கடிக்க வந்த நாயை எதிர்த்து நின்று போராடினான். இதனால் முகத்திலும் கழுத்திலும் பல முறை நாய் கடித்தது. அப்போதும் தன் தங்கையைக் கையை விடாத பிரிட்ஜர் இறுதிவரை எதிர்த்து நின்று தன் தங்கையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

நாய் கடித்த பிறகு பிரிட்ஜரின் முகத்திலும் தலையிலும் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

நாங்கள் எங்கள் துணிச்சலான பையனை மிகவும் நேசிக்கிறோம். மற்ற அனைத்து சூப்பர் ஹீரோக்களும் தங்கள் அணியில் இணைந்துள்ள சிறிய ஹீரோவை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

இந்தச் சம்பவத்தின்போது யாராவது இறக்க நேர்ந்தால் அது நானாக இருக்க வேண்டும் என நினைத்தேன்’ என்று பிரிட்ஜர் கூறியது எங்களை நெகிழ வைத்தது.

நாயின் குடும்பத்தினருக்கும் எங்களுக்கும் தற்போது நெருக்கம் மேலும் அதிகரித்துவிட்டது. பிரிட்ஜர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். ஆனால், சிறுவனால் கொஞ்சம் சிரிக்கத்தான் முடியவில்லை.

மற்றபடி அவனின் அற்புதமான ஆளுமை அப்படியே உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு அமெரிக்காவையும் தாண்டி பல நாடுகளில் வைரலாகி வருகிறது.

இதுவரை சுமார் 9 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தப் பதிவை லைக் செய்துள்ளனர்.

மேலும், காயமடைந்த சிறுவனுக்குப் பல இடங்களிலிருந்து உதவிகளும் குவிந்து வருகின்றன.சிறுவன் குணமடைந்த புகைப்படத்தை இன்று அவர் பதிவிட்டுள்ளார்.