பருத்தித்துறையில் பிரதேச சபையின் வாகனம் மீண்டும் வெடிப்பு..

0
21

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரின் வாகனத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட ரயரை வாகனத்தில் பொருத்துவதற்கு செயலாளர் மறுத்துவந்த நிலையில் உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புக்கு அமைய அது பொருத்தப்பட்டதால் இன்று சபைக் கூட்டத்தில் மீண்டும் கடும் அமளி துமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

இன்று அமர்வு தொடங்கியவுடனேயே ரயர் விவகாரம் சூடு பிடித்தது. வாகனத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட ரயர் விலை கூடியது என்பதால் பொருத்த முடியாது என்று செயலாளர் இடையூறு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த விடயம் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறைஞ்சனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரின் அறுவுறுத்தலுக்கு அமைய வாகனத்திற்கு ரயர் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய சபை உறுப்பினர்கள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட தங்களின் கருத்துக்கு செவி சாய்க்காத செயலாளர் ஆணையாளரின் கருத்துக்கு செவிசாய்க்கிறாரா என்று காரசாரமாக கேள்வி எழுப்பினர். வாக்குவாதம் சூடு பிடித்த நிலையில் அமர்வுகளைப் பதிவு செய்யும் அரச ஊழியர் அங்கிருந்து வெளியேறியதால் குழப்ப நிலை வலுவடைந்தது. இதனையடுத்து பிரதேசசபை உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

கடந்த மாதம் 18ம் திகதியும் இதேபோல் ரயர் விவகாரத்தால் அமளி துமளி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.