பாராளுமன்ற தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்கார்!

0
4

(ஆர்.ராம்)

9ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நிலையில் எந்தவொரு சர்வதேச தேர்தல்கள் கண்காணிப்பு தரப்பினரும் பங்கேற்க மாட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தினைச் சேர்ந்த தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் பத்து பேர் வருகை தருவதாக இருந்தபோதும் இறுதிநேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. பின்னர் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் வருகை தருவதாக இந்தபோதும் தற்போது அந்த உறுப்பினர்களும் வருகை தருவதற்கு மறுத்துவிட்டார்கள்.

குறித்த உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றபோது தமது கண்காணிப்பு பணிகளை சுதந்திரமாகவும், சுமூகமாகவும் முன்னெடுப்பதற்காக முன்வைத்த கோரிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டிருந்த போதும், வெளிவிவகார அமைச்சு அதனை ஏற்க மறுத்தமையின் காரணமாக அவர்கள் தமது பயணத்தினை இரத்துச் செய்வதாக ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தென்கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வருகை தருவதும் இன்னமும் உறுதியாகவில்லை. மேலும் வாக்கெடுப்பிற்கு இன்றிலிருந்து பத்து நாட்களே மீதமுள்ளது.

இந்நிலையில் இவ்விரு நாடுகளிலிருந்து வருகை தரும் கண்காணிப்புக்குழுக்களின் உறுப்பினர்கள், அரசாங்கம் ஏற்கனவே தீர்மானம் எடுத்து அறிவித்துள்ளமைக்கு அமைவாக,14நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றபோது கண்காணிப்பு பணிகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்படுகின்றது. இதனால் அந்நாடுகளின் காண்காணிப்பு உறுப்பினர்கள் வருகை தருவதும் சாத்தியமற்றுப்போயுள்ளது.

இதேவேளை, தாய்லாந்தை தளமாக கொண்டியங்கும் ஆசியாவின் சுதந்திரமான தேர்தலுக்கான வலையமைப்பினைச் (அன்பிரில்-ANFREL) சேர்ந்த அதிகாரியொருவர் முன்கள ஆய்வுக்காக வந்திருந்த நிலையில் அவர் மட்டுமே தற்போது தங்கியுள்ளார்.

அவர் உள்நாட்டில் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முஸ்தீபுகளைச் செய்து வருகின்றார்.

முன்தாக பொதுநலவாய நாடுகளைச்சேர்ந்த கண்காணிப்பாளர்கள் குழுவொன்று வருகை தருவதற்கு தீர்மானித்திருந்தபோதும் கொரோனா பரவல் அசாதாரண சூழலால் தமது பயணத்தினை அவர்களும் கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வறிருக்க, சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்க முடியாத நிலைமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ{ல் தெரிவிக்கையில்,

சர்வதேச கண்காணிப்பளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதன் ஊடாக தேர்தல்கள் நீதியாகவும், சுயாதீனமாகவும் நடைபெறுவதற்கான சில ஏதுநிலைகள் இருக்கின்றன. அவ்வாறான நிலையில் தற்போதே தேர்தல் சட்ட மீறல்கள் வெகுவாக ஆரம்பித்துள்ள நிலையில் இந்தபோக்கு மேலும் அதிகரிப்பதற்கே வாய்ப்புக்கள் உள்ளன. எனவே, சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்காத நிலைமையானது ஆரோக்கமற்றதொன்றாகவே உள்ளது என்றார்.

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்பதாக இருந்தபோதும் அவர்கள் இறுதிநேரத்தில் தமது பயணங்களை இரத்துச் செய்மைக்கான காரணம் ஆணைக்குழுவிடத்தில் தெரிவிக்கப்பட்டதா என்று வினவியபோது தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ{ல் பதிலளிக்கையில், தேர்தல் கண்காணிப்பு பணிகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்காக ஒருசில கோரிக்கைகளை அவர்கள் ஆணைக்குழுவிடத்தில் முன்வைத்திருந்தார்கள்.

அதற்கு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும் வெளிவிவகார அமைச்சும் அந்த விடயங்களில் சம்பந்தப்பட்டிருந்தமையால் அவர்களின் அனுமதியையும் பெற வேண்டியிருந்தது. ஆனாலும் வெளிவிவகார அமைச்சினால் அந்தக் அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றே எமக்கு கூறப்பட்டது என்றார்.