பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கோரிக்கை…

0
6

ஜனாதிபதி செயலக தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இணங்க வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

பிரதமரின் கீழ் வரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவைக் கலைத்து விடுமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர அண்மையில் திறைசேரியின் செயலாளர் அட்டிகலவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இந்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டாம் என பிரதம மந்திரி மகிந்த ராஜபக்சவுக்கு வாசுதேவ நாணயக்கார கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பிரதமரின் கீழ்வரும் ஒரு அமைச்சின் விடயத்தில் ஜனாதிபதி செயலகம் கையாள்வது உகந்ததல்ல என்றும் வாசுதேவ நாணயக்கார தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவைக் கலைத்துவிட்டு ஒருபகுதியை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையுடனும், மற்றைய பகுதியை மின்சாரசபையுடன் இணைப்பதற்கான திட்டத்தை ஜனாதிபதி செயலகம் அண்மையில் விடுத்திருந்தது. இது நடைமுறையில் பாரிய பிரச்சினையைக் கொண்டுவரும்.

மேலும் இறுதியில் அரசாங்கத்தின் மீது மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு இது காரணமாக அமைந்து விடும் என்றும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போதைய நிலையில் பாவனையாளர்களின் பிரச்சினைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உரிய முறையில் கையாண்டு சிறப்பான சேவைகளைச் செய்து வருகிறது.

இந்த நிலையில் இதனைக் கலைத்து விட்டு அதற்குப் பதிலாக அதன் செயற்பாடுகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மின்சார சபை ஆகியவற்றுடன் இணைப்பது பொருத்தமற்றது என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் திருத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் அது கலைக்கப்படும் என அவர் அந்த வரவு செலவுத் திட்டத்தில் கூறியிருக்கவில்லை.

இந்த நிலையில் அதனைக் கலைத்து விடுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.