பிள்ளையான். தாக்குதலுக்குள்ளான பெண் வைத்தியசாலையில்

0
7

சர்ச்சைக்குரியதாக உருமாறியுள்ள வாழைச்சேனை பிரதேசசபையில் இன்றும் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் தாக்குதலில் காயமடைந்ததாக கூறி இரண்டு பெண் உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதேசசபை செயலாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பிரதேசசபை வாக்கெடுப்பில் தோல்வியடைவோம் என தெரிந்ததும், ஆளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் பெரும் உருட்டு பிரட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனாவை காரணம் காட்டி சபையை ஒத்திவைத்தது, இரகசியமாக வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முயன்றதன் தொடர்ச்சியாக இன்று மீளவும் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க தவிசாளர் முயற்சித்தார்.

ஏற்கனவே எதிரணி பக்கம் 12 பேர் உள்ள நிலையில் கடந்த அமர்வில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். எதிரணியின் எண்ணிக்கையை குறைக்க, தவிசாளரே தனது ஆடையை கிழித்து விட்டு பொய் முறைப்பாடளித்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

அன்றைய அமர்வில் பிரதி தவிசாளரையும் கலந்து கொள்ள அனுமதிக்காமல் செய்ய பிள்ளையான் குழுவினர் பல முயற்சி மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஆளுந்தரப்பில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், விளக்கமறியலில் உள்ள இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்க வசதியான தருணத்தில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டுமென உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

அவர் அந்த கோரிக்கையை ஏற்று, தவிசாளரிற்கு அறிவித்ததாக எதிரணி தெரிவிக்கிறது. எனினும், அப்படியொரு அறிவித்தல் தமக்கு கிடைக்கவில்லையென தவிசாளர் தெரிவிக்கிறார்.

இன்று காலை 7.20 மணிக்கே ஆளுந்தரப்பு சபைக்கு வந்து விட்டது. தவிசாளர் அறையை பூட்டிவிட்டு உள்ளே இருந்துள்ளார்.

எதிரணியினர் வழக்கமான நேரத்திற்கு வந்து, சபா மண்டபத்தை மூடியதுடன், பிரதான வாயிலையும் மூடினர். உள்ளூராட்சி ஆணையாளரின் உத்தரவின்படி வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி கேட்டனர். ஆனால், ஒரு நபர் பெரும்பான்மையுள்ள சமயத்தில் வாக்கெடுப்பை நடத்த பிள்ளையான் தரப்பு விடாப்பிடியாக நின்றது.

பிள்ளையானும் சம்பவ இடத்திற்கு வந்தார். மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற ரீதியில் தவிசாளரை பார்க்க வேண்டும், பிரதேசசபை கூட்டத்தை நடத்த வேண்டுமென்றார் பிள்ளையான்.

தவிசாளர் தனது அறையை பூட்டிவிட்டு உள்ளே இருக்கிறார், அவர் யன்னல் வழியாக திறப்பை கொடுத்ததை கண்டதாக எதிரணியினர் தெரிவித்தனர். பின்னர் தவிசாளரின் அறையை உடைத்து, அவரை வெளியே அழைத்தனர். பிள்ளையான் அணியினரே அதை செய்தனர்.

பின்னர், சபா மண்டபத்தை தடுத்து நின்றவர்களுடன் தள்ளுமுள்ளுபட்டனர். பிரதேசசபை செயலாளர் வந்து எதிரணியினரின் கோரிக்கையை கேட்டார். அவர்கள் அதை சொல்லிக் கொண்டிருந்த போதே அவர் மயக்கமடைந்து விழுந்தார்.

பின்னர் சபா மண்டபத்தின் கதவிற்கு உள்ளும் வெளியும் நின்று இரு தரப்பும் சிறிது நேரம் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர்.

பின்னர், அதையும் உடைத்துக் கொண்டு உள் நுழைந்த பிள்ளையான் தரப்பினர், எதிரணியிர், ஊடகங்கள் எதுவுமில்லாத நிலையில், வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக அறிவித்தனர்.

எதிரணியின் இரண்டு பெண் உறுப்பினர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பிள்ளையான் தரப்பினரால் தாக்கப்பட்டே தாம் காயமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.