புலிகள் இருந்த காலகட்டத்தில் வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் கடத்தல் குறைவு

0
5
14 / 100

(எம்.மனோசித்ரா)

விடுதலைப் புலிகளின் செயற்பாடு காணப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் எவ்வாறு போதைப்பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தெரியாது.

ஆனால் அந்த காலப்பகுதியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கூட வெளிநாட்டு மீனவப்படகுகள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தருவதில்லை.

இதன் காரணமாக அக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் குறைவாக இருந்திருக்கலாம் என்று கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையான 9 மாத காலப்பகுதியில் கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட சுமார் 800 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டில் குறித்த காலப்பகுதியில் 1010 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவான ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவதை கடற்படையினரின் பலவீனம் என்று கூற முடியாது.

கடற்படையினரால் போதைப் பொருள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் வலுப்பெற்றுள்ளமையே இதற்கான காரணமாகும். இவ்வாறான கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தலை மேலும் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையணியை பலப்படுத்துவதே தமது எதிர்கால திட்டமாகும் என்றும் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் குறிப்பாக வடக்கு , கிழக்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இது தொடர்பாக வீரகேசரிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே கடற்படை படை பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நேர்காணலின் முழு விபரம் வருமாறு,

கேள்வி : இலங்கைக்கு வடக்கு மற்றும் கிழக்கு கடல் மார்க்கத்தின் ஊடாகவே அதிகளவு போதைப் பொருள் கடத்தப்படுகிறது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ? ஏன் இவ்வாறு கடல் மார்க்கமான போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது?

பதில் : இலங்கைக்கு அயல் நாடுகள் பல உள்ளன. இவ்வாறு அயல் நாடுகள் அதிகமாகக் காணப்படும் போது எல்லைப்பகுதிகளில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறக்கூடும்.

வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்களில் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருள் பரிமாற்றம் அதிகளவில் இடம்பெறுகின்றன.

வடக்கிற்கும் அயல் நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற மக்கள் தொடர்புகளே இதற்கான பிரதான காரணியாகவுள்ளது.

குடும்பங்களுக்கிடையிலான தொடர்புகளின் போது அவர்களுக்கு பயணங்கள் அத்தியாவசியமாகவுள்ளன. இது போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாகவே இந்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் அதிகமாகவுள்ளது.

கேள்வி : விமான நிலையங்களின் ஊடாக போதைப்பொருள் கடத்தல் பாரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு விமானப்படையினரால் பல தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தல் அதிகமாகக் காணப்படுகின்றமைக்கான காரணம் கடற்படையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் காணப்படுகின்ற பலவீனமா?

பதில் : கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தப்படும் போது அதாவது படகொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்குமாயின் அவற்றை கைகளில் எடுக்கும் போதே இனங்காண முடியும்.

அதனை விடுத்து போதைப் பொருளை இனங்காண்பதற்கான விசேட தொழிநுட்ப வேலைத்திட்டங்கள் எவையும் கடற்படையிடம் இல்லை. இது தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஏதேனும் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் நாம் அறியவில்லை.

எவ்வாறிருப்பினும் போதைப்பொருன் கடத்தலை இனங்காண்பதற்கு வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை தொடர்பில் ஊடகங்களில் கருத்து வெளியிடுவது பொறுத்தமானதாக இருக்காது.

விமான நிலையங்களில் பயன்படுத்தப்படுகின்ற தொழிநுட்பங்கள் தொடர்பில் என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் கடல் மார்க்கமாக கடத்தப்படுகின்ற அதிகளவான போதைப் பொருள் கைப்பற்றப்படுகின்றமையை கடற்படையினரின் பலவீனம் என்று கூற முடியாது.

இதனை எமது பலமாகவே கருதுகின்றோம். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் எம்மை தாண்டி இவை கொண்டு செல்லப்படக் கூடும். எனினும் பெருமளவான சந்தர்ப்பங்களில் நாம் அவற்றை இனங்கண்டு கையகப்படுத்திருக்கின்றோம்.

கேள்வி : அதிகளவிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுவதாகக் கூறுகின்றீர்கள். எனினும் தொடர்ந்தும் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டல்லவா இருக்கின்றன?

பதில் : போதைப் பொருள் கடத்தல் என்பது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. உலகின் பல நாடுகளும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.

2016 ஆம் ஆண்டாகும் போது 13 வெளிநாட்டு மீன்பிடி படகுகள் கடற்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 9 படகுகளில் ஹெரோயின் உள்ளிட்ட வெவ்வேறு போதைப்பொருட்கள் பாரியளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகளவான போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்றமை யாருடையதும் பலவீனம் அல்ல. உலகலாவிய ரீதியில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு மிகவும் செலவு குறைந்த வழி கடல்மார்க்கமாகும். அதற்கமைய கொள்கலன்கள் கொண்டு செல்லல் உள்ளிட்டவற்றைப் போன்றே போதைப்பொருள் கடத்தலும் இடம்பெறுகிறது.

உலகின் பல இடங்களிலும் போதைப்பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் இடம்பெறுவதற்குமான காரணமுமாகும்.

இந்த செயற்பாடுகளை இலங்கை கடற்படையினரால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. குறித்த கடற்பிராந்தியங்களுக்கு உரித்துடைய சகல இராச்சியங்களும் ஒன்றிணைந்து அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி : நீங்கள் கூறுவதைப் போல உலகலாவிய ரீதியில் போதைப் பொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது என்றால் இலங்கையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதா?

பதில் : அது தொடர்பான தரவுகள் எம் வசம் இல்லை. எனினும் எம்மால் முன்னெடுக்கப்படுகின்ற போதைப் பொருள் கைப்பற்றல் மற்றும் கைதுகள் அதிகரித்துள்ளதால் ஒரு கிராம் போதைப்பொருளின் விலை 4 மடங்கால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது 10,000 இலிருந்து தற்போது 40,000 வரை போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது போதைப் பொருட்கள் மீட்க்கப்படும் அளவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் சுமார் 800 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு குறித்த காலப்பகுதியில் 1,010 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் விளக்கம் கடற்படையினரின் பலவீனம் அல்ல. போதைப்பொருள் தொடர்பில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய சந்தைகளில் பொருட்களின் விநியோகம் குறைவடையும் போது அவற்றுக்கான கேள்வியும் விலையும் அதிகரிப்பதைப் போலவே , போதைப்பொருள் சந்தையின் நிலைவரமும் காணப்படுகிறது. இதன் காரணமாகவே போதைப்பொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. எனவே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது தொடர்பில் குறிப்பிடுவதற்கான தரவுகள் எம்வசம் இல்லை.

கேள்வி : பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கேரள கஞ்சா உள்ளிட்டவை காணப்படுகின்றன. இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படும் செயற்பாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? இதற்காக கடற்படை முன்னெடுக்கவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் என்ன?

பதில் : உலகின் பல நாடுகளிலும் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் இடங்களில் இலங்கையும் ஒன்றாகும்.

அதற்கமைய அயல் நாடுகளில் தயாரிக்கப்படுகின்ற போதைப்பொருட்கள் இலங்கைக்கு விநியோகிக்கப்படும் வீதம் அதிகமாகவுள்ளது. எவ்வாறிருப்பினும் கடற்படையினர் , பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, போதைப் பொருள் ஒழிப்பு நிறுவனங்கள் , ஐ.நா.வின் விசேட வேலைத்திட்டங்கள் என்பவற்றின் மூலம் சர்வதேச மற்றும் தேசிய நிலைவரம் மதிப்பீடு செய்யப்படுகிறது.

அந்த மதிப்பீடுகளுக்கமையவே கடற்படையினரின் கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தினந்தோரும் இந்த கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான கண்காணிப்புக்களின் ஊடாக மாத்திரமே கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியும். இதன் போது தேசிய மீனவப்படகுகளை சோதனைக்குட்படுத்தி அவற்றின் மூலம் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகின்றனவா என்பதை இலகுவாக கண்டு பிடிக்க முடியும்.

இவ்வாறான செயற்பாடுகளின் பின்னர் முழுமையான மதிப்பீட்டினை முன்னெடுத்து அவற்றின் அடிப்படையில் அயல்நாடுகளுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல் , தேவை ஏற்படின் விமானப்படையின் உதவியைப் பெற்றுக் கொள்ளல் , என்பவற்றின் மூலம் வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.

இவை தவிர குறிப்பாக வடக்கு கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக கடற்கரையை அண்மித்த 320 கண்காணிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலாபம் தொடக்கம் பேருதுதுட்டுவ வரை இவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றினை மேலும் அதிகரிப்பதற்கான நடவவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே மேற்கூறப்பட்ட கடற் பிராந்தியங்களி இடம்பெறக் கூடிய போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை இயன்றவரை கட்டுப்படுத்த முடியும்.

எதிர்கால வேலைத்திட்டங்கள் எனும் போது எமது கடற்படையணியை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான அதிகளவான கப்பல்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்பணியை வலுப்படுத்துவதன் ஊடாக தற்போதுள்ளதை விட வெற்றிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

கேள்வி : இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது எனில் அதனை கொள்வனவு செய்வதற்கு நிச்சயம் பிரதான போதைப் பொருள் கடத்தல் காரர்கள் நாட்டுக்குள் இருக்க வேண்டும். அவ்வாறான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களை இனங்காண்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன? இதற்கான ஏதேனும் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?

பதில் : போதைப் பொருளை கொண்டு செல்பவர்களே கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களில் சிலர் போதைப்பொருள் வியாபாரத்திற்கு புதிதானவர்களாகக் கூட இருப்பர். இவர்கள் போதைப்பொருள் மீட்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் ஏனைய விடயத்திற்கு பொறுப்பான தரப்பினருடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அந்த நடவடிக்கைகளின் அடுத்த கட்டம் குறித்து எம்மால் தெளிவாகக் கூற முடியாது.

கேள்வி : நாடளாவிய ரீதியில் சிறிய சிறிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களின் போதைப்பொருள் வியாபாரத்தை தடுப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன?

பதில் : போதைப்பொருள் சில்லறை விற்பனையாளர்கள் தொடர்பில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் எமது எதிர்பார்ப்பு குறைந்தளவிலேனும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதாகும்.

கைது செய்ததன் பின்னர் உரிய சட்ட நடவடிக் கைகளின் பின்னர் அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதற்கமைய அரசாங்கத்தின் ஆலொசனைக்கமைய போதைப்பொருள் பாவனையிலிருந்து சமூகத்தினரை முழமையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி : வடக்கு , கிழக்கிலுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக காரணம் என்ன?

பதில் : நாம் ஏற்கனவே கூறியதன் படி போதைப்பொருள் என்பது இலங்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதே போன்று இலங்கையில் குறிப்பிட்டவொரு இடத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதும் அல்ல.

எவ்வாறிருப்பினும் போதைப்பொருள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முதலில் விநியோகிக்கப்படும் இடங்களில் அதன் பாவனை அதிகமாகவே காணப்படும்.

சில சந்தர்ப்பங்களில் இளைஞர் யுவதிகள் பரிசோதிப்பதற்காக போதைப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். பின்னர் அதற்கு பழக்கப்படக் கூடிய நிலைமை ஏற்படும்.

இவ்வாறான காரணங்களால் தான் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படலாம். அதனை விடுத்து குறித்த பகுதியை மாத்திரம் இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுகிறது என்று கருத முடியாது.

கேள்வி : விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காணப்பட்ட காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பயன்பாடு இவ்வாறு அதிகரித்து காணப்படவில்லை என்பது அங்குள்ள பெரும்பாலான மக்களின் நிலைப்பாடாக உள்ளது. இதன் உண்மை தன்மை என்ன?

பதில் : விடுதலை புலிகள் பிரச்சினை காணப்பட்ட காலப்பகுதியில் குறித்த கடற் பிராந்தியங்கள் பாரிய யுத்த செயற்பாடுகள் காணப்பட்ட பகுதியாகும். அவற்றில் தனிப்பட்ட ரீதியில் நாமும் பங்குபற்றியுள்ளோம். அவ்வாறான பிரதேசங்களில் தொழிலுக்காகக் கூட எவரும் செல்ல மாட்டார்கள்.

எனினும் விடுதலைப் புலிகள் அந்த காலத்தில் போதைப்பொருள் தொடர்பில் எவ்வாறான சட்டங்களை நடைமுறைப்படுத்தினர் என்று எனக்கு தெரியாது.

அத்தோடு அந்த காலப்பகுதியில் அயல் நாடுகளில் மீன் பிடி படகுகள் கூட இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தருவதில்லை. அதற்கமைய யாரும் தமது தேவைக்காக வடக்கு , கிழக்கு பகுதிளில் போதைப்பொருளை விநியோகிப்பார்கள் என்று நான் கருதவில்லை.

https://www.virakesari.lk/article/115590