பொலிஸ் அதிகாரியின் செயல்! காலில் விழுந்த இளைஞன்

0
11

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் விழுந்து கிடந்த பேர்ஸினை தம்புள்ளை பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார்.

இதன் போது பேர்ஸின் உரிமையாளர் கண்களில் கண்ணீருடன் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் சிறிய லொறி ஒன்றில் இருந்து இறங்கி சென்ற இளைஞனின் பேர்ஸ் கீழே விழுந்துள்ளது.

அதனை வேறு ஒருவர் எடுக்க முயற்சித்த போது பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் இதனை பொலிஸ் அதிகாரி தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய பேர்ஸின் உரிமையாளரான இளைஞன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இளைஞனின் பேர்ஸில் 30 ஆயிரம் ரூபாய் பணம், சாரதி அனுமதி பத்திரம், அடையாள அட்டை என்பன இருந்துள்ளன.

தான் கம்பஹா பிரதேசம் என்பதனால் பல மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் போயிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது உறவினர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு தனது வாழ்க்கையில் முதல் முறையாக பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது எதிர்பார்ப்பு எல்லாம் கலைந்து போன நிலையிலேயே ஒலிப்பெருக்கியில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக கண்ணீருடன் கூறிய இளைஞன் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு இவ்வாறு இருக்கும் என தான் ஒரு போதும் நினைத்ததில்லை எனவும் பொலிஸார் தொடர்பில் தவறான எண்ணமே இதுவரை தனது மனதில் இருந்ததாக இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.