போனி கபூர் காணவில்லை… போஸ்டர் அடித்து ஒட்டிய அஜித் ரசிகர்கள்

0
9

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வரும் போனி கபூர் காணவில்லை என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ’வலிமை’. இப்படத்தின் கடந்த வருட இறுதியில் தொடங்கியது. அதன் பின் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ’வலிமை’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் டைட்டில் வெளியானதை அடுத்து, இந்த படத்தின் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. அஜித் தவிர மற்ற அனைத்து நடிகர்களின் படங்களின் அப்டேட்டுகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள், தயாரிப்பாளர் போனி கபூர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் பல முறை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் போனிகபூர் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அஜித் ரசிகர்கள் தற்போது ’போனிகபூரை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த போஸ்டரில் போனிகபூர் அவர்களே கடந்த 8 மாதங்களாக ’வலிமை’ படத்தின் அப்டேட்டை சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்டேட்டும் காணவில்லை உங்களையும் காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.