மகள் செய்த செயல்! அவமானத்தில் தற்கொலை செய்த பெற்றோர்

0
57

தமிழகத்தில் விவாகரத்து பெற்று வீட்டில் வசித்து வந்த மகள் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் அவமானத்தில் அவர் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. இவருடைய மனைவி பாக்கியம் (55). இவர்களுக்கு அலமேலு(32), சந்தியா(29), ரோசி(27) என 3 மகள்கள் உள்ளனர்.

இவர்களில் அலமேலு, சந்தியா ஆகியோருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அதே கிராமத்தில் உள்ள அவரவர் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். கடைசி மகள் ரோசிக்கும், பள்ளிப்பட்டு தாலுகா ராஜாநகரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோசி, கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையில் ரோசிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. காதலர்கள் இருவரும் செல்போன் மூலம் தங்களது காதலை ரகசியமாக தொடர்ந்து வந்தனர்

மகளின் இந்த காதல் விவகாரம் அறிந்த அவரது பெற்றோர், ரோசியை கண்டித்தனர். ஆனாலும் ரோசி, தனது காதலை தொடர்ந்தார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் அவரது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறிய ரோசி, தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். தனது மகள் காதலனுடன் ஓடியதை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

விவாகரத்து பெற்று வீட்டில் இருந்த தங்கள் மகள், காதலனுடன் ஓடிவிட்டதால் அவமானம் தாங்க முடியாமல் தவித்த ஏழுமலை, அவருடைய மனைவி பாக்கியம் இருவரும் வீட்டில் உள்ள மின்விசிறிகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தனது பெற்றோர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது மூத்த மகள் அலமேலு, கதறி அழுதார். இது பற்றி தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.