மகாராஷ்டிரா: 19,749 பேர் பலி; மிரட்டும் கொரோனா தொற்று

0
6

மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித் தொற்றின் கோரப்பிடி மேலும் இறுகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு புதிதாக 12,614 பேருக்கு கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,84,754ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,749ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்குப் பின் கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது என்றும் தற்போது 1,56,409 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கிடையே கர்நாடகாவில் புதிதாக 8,818 பேருக்கு கிருமி தொற்றியதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,19,926ஆக அதிகரித்துள்ளது.

அங்கு நேற்று முன்தினம் ஒரேநாளில் மேலும் 114 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து மரண எண்ணிக்கை 3,831ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,811ஆக அதிகரித்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ள கர்நாடக சுகாதாரத்துறை தற்போது 81,276 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிருமித் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுவரை 693 பேர் பலியாகியுள்ளனர். 68 ஆயிரம் பேர் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ஆந்திராவில் மொத்தம் 2,81,817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2,562 பேர் பலியாகியுள்ளனர்.