மட்டக்களப்பு அடியோடு அழிவதை எவராலும் தடுக்க முடியாது… எச்சரிக்கும் சுமணரத்தன தேரர்

0
1571

தமிழ் பேசும் மக்களின் தாயகமான மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாதென மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் உள்ள விகாரை வளாகம் ஒன்றுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த அம்பிட்டியே சுமணரத்தன தேரர், அங்குள்ள வெட்டாந்தரைகளை காண்பித்துத் தனது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த தரைப்பகுதி, இயந்திரங்களினால் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு முன் அங்கு புத்தர் சிலைகளும், புராதனச் சின்னங்களும் இருந்ததாக அக்காணொளியில் அவர் உரத்த தொனியில் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்த அவரது காணொளியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

செங்கலடி ரஜமகா விகாரையின் காணிகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இதனை ஒருவாரத்திற்குள் நிறுத்தப்படாவிட்டால் பாரிய எதிர்விளைவுகளை மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்க நேரிடும்.

2016ஆம் ஆண்டில் தான் இந்த புராதனப் பிரதேசம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த வியாழேந்திரன் தனக்குக் கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.

தற்போது இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்கும் வியாழேந்திரன் அந்தப் பதவியைப் பயன்படுத்தித் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து விவகாரத்தை மூடி மறைத்துள்ளாரென குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை தனக்கெதிராக எழுபது வழக்குகள் இருப்பதாகவும் அந்த வழக்குகளை ரத்துச் செய்து கிழக்கு மாகாணத்தில் பௌத்த சமய புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான வசதிகளைச் செய்து தருமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.