மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகரும் நிவர் புயல்… கரையை கடக்கவிருக்கும் நேரத்தை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம்

0
333

நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று நண்பகலில் செய்தியாளர்களை சந்தித்தபோது பாலச்சந்திரன் மேலும் கூறியதாவது: நிவர் தீவிர புயல், சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 250 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது காற்றின் வேகம் அதிகபட்சம் 115 கிலோ மீட்டர் வேகத்தில் உள்ளது.

இன்று மதியம் அதி தீவிர புயலாக மாறி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுவை அருகே இன்று இரவு கரையை கடக்கும். இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரம் மற்றும் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.

புயல் கரையை கடக்கும்போது, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் அதிக பட்சமாக 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் கரையை கடக்கும்போது, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் அதிக பட்சமாக 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் 15 சென்டிமீட்டர், தரமணியில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. பெரம்பூரில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். படிப்படியாக புயலால் ஏற்படும் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.