முகக்கவசம் அணியாத ஒரு கொரோனா நோயாளியால் 400 பேருக்கு வைரஸ் பரவலாம் – எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

0
4

மீண்டும் ஒரு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாத அளவிற்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால், தற்போது அம்மாநிலத்தில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பள்ளிகள் மூடியே இருந்தன.
இதற்கிடையில், தீபாவளி விடுமுறை முடிந்த உடன் வரும் 23-ம் தேதி முதல் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என மகாராஷ்டிர பள்ளிக்கல்வித்துறை நேற்று அறிவித்தது.
பள்ளித்திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:-
பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு 17-ம் தேதி முதல் 22-ம் தேதிக்குள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்த ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவர்.
மாணவர்களும், ஆசிரியர்களும் தினமும் தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
பள்ளிகள் ஸ்சிப்ட் முறைப்படி 2 பகுதிகளாக செயல்படும்.
ஒரு ஸ்சிப்பிட்ற்கு 4 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
ஒரு மேசையில் ஒரு மாணவர் மட்டுமே இருக்க அனுமதி
உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் தீபாவளி பண்டிகைகளால் கொரோனா வைரஸ் பரவல் குறித்த முதல்மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அதில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி தீபாவளிக்கு பின்னர் நாங்கள் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளோம். மத வழிப்பாட்டு தளங்களையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளோம்.
காற்றுமாசுபாடு கொரோனா அச்சுறுத்தலை அதிகரிக்கலாம். தீபாவளிக்கு வெடிவெடிப்பதை தவிர்த்துவிட்டு அகல்விளக்குகளை ஏற்றும்படி நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தீபாவளிக்கு பிந்தைய 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. அந்த நாட்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான அவசியம் ஏற்படாது.
மும்பையில் பொது ரெயில் போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும்.
ஒரு கொரோனா நோயாளி முகக்கவசம் அணியாமல் கூட்டத்தில் சென்றால் அவரால் 400 நபர்களுக்கு கொரோனா வைரசை பரப்ப முடியும். அந்த 400 பேரால் இன்னும் பல நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவலாம்.
என்றார்.