மூன்று மாத விசேட தலைமைத்துவப் பயிற்சிக்குள் உள்ளவாங்கப்படவுள்ள பட்டதாரி பயிலுனர்கள்

0
4

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 3 மாத தலைமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு பிரிவினருடணான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (09) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இம்மாவட்டத்தில் 2,088 பட்டதாரி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கடமையினைப் பொறுப்பேற்கும் இறுதித் தினம் செப்டம்பர் 10 என அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை இம்மாவட்டத்தில் 1966 பட்டதாரி பயிலுனர்கள் மாத்திரமே 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தமது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளனர்.

கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான 3 மாத தலைமைத்துவப் பயிற்சி பாதுகாப்புப் பிரிவினரால் வழங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பயிற்சி நெறியினை நிருவாகம், விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், நீர்ப்பாசனம், கல்வி, போக்குவரத்து, கைத்தொழில், உள்ளூராட்சி மன்றங்கள், தொடர்பாடல், தனியார் மற்றும் ஏனைய துறைகள் போன்ற 13 பிரிவுகளில் 39 அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்குவதற்காக கலந்துரையடல்கள் இடம்பெற்று வருகின்றன.