யாழ்-நடமாடிய கொரோனா நோயாளர்

0
19

தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய ஒருவர் கொழும்பிலிருந்து கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதிக்கு ​சென்று, அங்கு பல இடங்களில் நடமாடியுள்ளதாகவும் அது தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி தமக்கு தகவல் கிடைத்ததாகவும் வட மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் ஆர்.கேதீஸ்வரன் கூறினார்.

இதனையடுத்து, குறித்த நபரிடம் நேற்று PCR பரிசோதனை நடத்தப்பட்ட போது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் பின்பு அவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் வட மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும், அவர் சென்றுவந்த இடங்களை அடையாளம் கண்டு, அங்குள்ளவர்களை தனிமைப்படுத்தி வருவதாகவும் வட மாகாண சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதனிடையே, யாழ்ப்பாணம் – திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. மகேசன் கூறினார்.

அத்துடன், சங்கானை நகரிலுள்ள மீன் சந்தை மூடப்பட்டுள்ளதுடன், மூளாய் பகுதியிலுள்ள கூட்டுறவு வைத்தியசாலையின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.