வடிவேல் பாலாஜியின் உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க வைத்தியசாலையே காரணம் – உண்மைகளை போட்டுடைத்த உறவினர்

0
12

நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு தனியார் மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கேட்ட பணத்தை கொடுத்தோம் ஆனால் நோய்க்கு சரியான சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டனர் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று மரணமடைந்தார். அவரது மரணம் சின்னத்திரை கலைஞர்களை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிகிச்சை செய்ய பணமில்லாமல் அவர் மரணமடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு காரணம் தனியார் மருத்துவமனைதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சின்னத்திரையில் அறிமுகமாகி சினிமாவில் வலம் வந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி, சேத்துப்பட்டு எம்.எஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு நாட்கள் இருந்து விட்டு மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு 10 முதல் 12 தினங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜி வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் பல நடிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவருடன் பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ள டிவி தொகுப்பாளர் ஆதவன் தனது சோகத்தை பதிவு செய்துள்ளார். யாரிடமும் முகம் சுளிக்காமல், சிரிக்க வைப்பதை மட்டுமே தன்னுடைய கடமையாக வைத்திருந்தவர் வடிவேல் பாலாஜி. கடந்த பல நாட்களாக தொடர்ச்சியாக என்ன நடக்கிறது என்பதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். என்ன பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

இந்த மாதிரியான நேரத்தில் சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும்தான் இன்சூரன்ஸ் கோருவோம். மற்ற நோயாளிகளுக்குப் பண்ணமாட்டோம் என்றார்கள். ஒரு நல்ல மருத்துவமனையில்கூட எங்களால் அவரைச் சேர்க்க முடியவில்லை. அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. ஒரு சில பிரச்சினைகள் அவருக்கு இருந்தும் அதைச் சொல்லாமலே அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். அதற்குப் பணம் கட்ட முடியவில்லை என்பதுதான் காரணம்.

முடிந்த அளவுக்குப் பணம் புரட்டிக் கொடுத்தோம். மீதிப் பணம் கட்ட முடியவில்லை என்பதால் அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். அதை எங்களிடம் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் ஆதவன். அரசு மருத்துவமனையில் கண்டுபிடித்து, 3 நாளுக்கு முன்பே இப்படி இருந்துள்ளதே என்று கேட்டார்கள். சிகிச்சை செய்திருக்கலாம். ஆனால், இந்த வருத்தம் எனது வாழ்நாள் முழுக்க இருக்கும். இப்படியொரு நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. எங்களால் இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை என்றும் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார் ஆதவன்.

வடிவேல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக, சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகலில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பணப்பற்றாக்குறை காரணமாகவே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பகிரப்பட்டது.

இதனை வடிவேல் பாலாஜியின் உறவினர்கள் மறுத்துள்ளனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையாலேயே அவர் உயிரிழந்ததாகவும் பணம் இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என்றும் தெரிவித்தனர்.

உடல்நலம் சரியில்லாமல் போன நாள் தொடங்கி வடிவேல் பாலாஜியின் சிகிச்சைக்காக ரூ.18 முதல் 20 லட்சம் வரை செலவு செய்தும் காப்பாற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்த உறவினர்கள் பணத்தை பறிக்க தனியார் மருத்துவமனை முயற்சி மேற்கொண்டதாலேயே இறுதியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.