விமானியின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம்… போலீசார் வெளியிட்ட முதல் அறிக்கை

0
97

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அவர்களுடைய முதல் தகவல் அறிக்கையில் விமானியின் கவனக்குறைவே காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

கோழிக்கோடு விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் பலியாகினர். 120க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அனைவரும் கோழிக்கோடு, மலப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது 91 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சகத்தைச் சேர்ந்த 2 குழுக்கள் விசாரித்து வருகிறது. கேரள போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். கேரளாவின் மலப்புரம் மாவட்ட கூடுதல் எஸ்பி ரிதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறிதுது விமான நிலையம் அமைந்துள்ள ஹரிப்பூர் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதில் விமானியின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம், விமான விபத்து சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தின் போது விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.இதனிடையே விமானி விமானத்தை தரையிறக்குவதில் தவறாக முடிவெடுத்ததால் விபத்து நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

ஏனெனில் விமானம் வடக்கு பகுதியில் உள்ள 10ம் எண் ஓடுபாதையில் தரையிறங்கியது. இதனால் தான் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. வழக்கமாக கிழக்கு பகுதியில் உள்ள 28ம் எண் ஓடுபாதையில் விமானம் தரையிறங்குமாம். இதுவே கோழிக்கோடு விமான நிலையத்தின் முக்கியமான ஓடுபாதையாகும். மழைக்காலங்களில் பெரும்பாலும் விமானம் இங்குதான் தரையிறங்கும். ஆனால் விமானி ஏன் இந்த ஓடுபாதையில் தரையிறக்காமல் 10ம் எண் பாதையில் தரையிறங்கினார் என்பது தெரியவில்லை.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டறை அறிவுரையின்படி 28ம் எண் ஓடுபாதையில் தான் விமானத்தை பைலட் தரையிறக்க முயற்சித்துள்ளார். ஆனால் தூரப்பார்வை கிடைக்காத காரணத்தால் 2வது முயற்சியின் போது 10ம் எண் ஒடுபாதையில் இறக்கி உள்ளார். அப்போது காற்றின் வேகம் 10 நாட்டிக்கல் மைலுக்கு மேல் இருந்திருக்கிறது. இறுதியில் விபத்தில் சிக்கி உள்ளது-ஏற்கனவே இதே 10ம் எண் ஓடுபாதையில் 2 முறை விபத்துக்கள் நடந்துள்ளன.