விமான நிலையம் திறக்கப்படாது

0
9

நாட்டில் கொவிட் வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த அச்சம் நிலவுகின்ற நிலையில் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கமைய விமான நிலையத்தை இப்போதைக்கு திறப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் திறக்கலாம் என விமான சேவைகள் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களில் நாட்டில் மீண்டும் கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது, மக்கள் குழப்பத்தில் உள்ளனர், இந்நிலையில் விமான நிலையத்தை திறப்பது நாட்டிற்கு மீண்டும் நெருக்கடிகளை உருவாக்கும்.

இந்தியாவில் கொவிட் வைரஸ் தாக்கம் மிக மோசமாக உள்ளது. இந்தியாவில் இருந்து ஒரு பிரஜையேனும் நாட்டிற்குள் வந்தால் இலங்கையில் நிலைமைகள் மோசமடையும். இலங்கையர்கள் கூட இப்போது நாட்டிற்குள் வருவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே இப்போதைய நிலையில் விமான நிலையத்தை திறப்பது சிக்கலான விடயம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.