தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று பெண் பிள்ளைகளின் கையை பிடிக்கும் வேட்பாளர்

0
29

தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வேட்பாளர் ஒருவர், வீடுகளில் உள்ள யுவதிகளின் கைகளை பிடித்து பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

மட்டக்களப்பில் இந்த சம்பவம் நடந்து வருகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ளார்.

குறிப்பிட்ட பிரமுகர், வயதானவர். அனைத்து பெண்களையும் பிள்ளையென விளித்து அதிக உரிமையுடன் நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர். அவரை அறிந்தவர்கள், அவரது அந்த இயல்பை பற்றி அறிந்திருப்பார்கள்.

ஆனால், மாவட்டத்தில் உள்ள அனைவரும் அதை அறிந்திருக்க மாட்டார்கள். அவரது இயல்பை அனுசரித்து செல்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.

நாடாளுமன்ற தேர்தலில் குதித்துள்ள அவர், தற்போது பிரதேசம் பிரதேசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது பகுதியை சேர்ந்தவர்களாலேயே, பிரதேச செயலகத்தின் சிறுவர், பெண்கள் பிரிவின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.

வீடுகளிற்கு வரும் வேட்பாளர், தமது பிள்ளைகளின் கைகளை பிடித்துக் கொண்டு விடுகிறார், அவருக்கே வாக்களிக்கிறோம் என சொல்லும் வரை கையை விடாமல் பிடித்து வைத்திருக்கிறார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“உங்கள் வீட்டு பிள்ளை“ என நிரூபிக்கவோ என்னவோ, வீடுகளிற்கு நுழையும் அந்த வேட்பாளர், வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளின் கையை பிடிப்பது மட்டுமல்லாமல், வீட்டு சமையலறைக்குள்ளும் நுழைந்து உட்கார்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம்.

அந்த வயதான மனிதர் விரைவில் அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுவார் என தெரிகிறது.