உடல் பருமன் கொண்டவர் நபரா நீங்கள் …? உங்களுக்கான இருதய நலம் சார்ந்த எச்சரிக்கை ரிப்போர்ட்…

0
4
11 / 100

உடற்பருமன் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்தவர்களாக இருந்தபோதிலும், அதிக கொலஸ்டிரால், நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் 4 மடங்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் 5 மடங்கு உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அலிஜாண்டிரோ லூசியா என்பவர் தலைமையில் நடந்த ஆய்வில் உடற்பருமன் உள்ளவர்களுக்கு இருதய நலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.

இதற்காக முதன்முறையாக நாடு முழுவதும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.  இந்த ஆய்வில், 5 லட்சத்து 27 ஆயிரத்து 662 பேர் உட்படுத்தப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் ஸ்பெயின் நாட்டில் பணியில் இருப்பவர்கள்.  ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 42.  பெண்கள் 32 சதவீதத்தினர் ஆவர்.

அவர்களை சராசரி உடல் எடை கொண்டவர்கள் (42%), அதிக எடை (41%) மற்றும் உடற்பருமன் (18%) கொண்டவர்கள் என வகைப்படுத்தினர்.  இதுதவிர, உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஏற்ப அவர்களை 3 வகையாக பிரித்தனர்.

அதன்படி, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச உடற்பயிற்சியை சீராக செய்து வருபவர்கள் ஒரு பிரிவாகவும், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் கீழாக வாரந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்கள் 2வது பிரிவாகவும் மற்றும் எந்த உடற்பயிற்சியிலும் ஈடுபடாதவர்கள் 3வது பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் பெருமளவிலானோர் (63.5%) எந்தவித உடற்பயிற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தனர்.  12.3% பேர் போதிய உடற்பயிற்சி செய்யாதவர்களாகவும், 24.2% பேர் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களாகவும் இருந்தனர்.

இருதய நலம் சார்ந்த 3 ஆபத்து காரணிகளாக அதிக கொலஸ்டிரால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவை தீர்மானிக்கப்பட்டன.  இவை மாரடைப்பு மற்றும் ஸ்டிரோக் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவையாக உள்ளன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 30% பேருக்கு அதிக கொலஸ்டிரால், 15% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் 3% பேருக்கு நீரிழிவு ஆகியவை இருந்துள்ளன.

எனினும், உடல் எடை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் மேற்கூறிய 3 ஆபத்து காரணிகள் ஆகியவற்றுடன் உள்ள தொடர்பு பற்றியும் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், அனைத்து வகையான உடல் எடை கொண்டவர்களுக்கும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை (உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச அளவோ அல்லது அதற்கு குறைவாகவோ) மேற்கொள்வது நீரிழிவு ஏற்படுவதற்கான காரணியை குறைப்பதில் தொடர்பு கொண்டுள்ளது.

உடற்பயிற்சியே இல்லாமல் இருப்பதற்கு இது ஏற்றது.  இதுபற்றி லூசியா கூறும்பொழுது, இதன்படி, உடல் எடை எந்த அளவில் இருந்தபோதிலும் ஒவ்வொருவரும், தங்களது உடல்நலன் பாதுகாக்க சுறுசுறுப்புடன் ஏதேனும் செயலில் ஈடுபட்டு கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அனைத்து உடல் எடை கொண்டவர்களுக்கும், உடற்பயிற்சி அதிகரிக்கும்பொழுது, உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பு குறைகிறது.

அதிக உடற்பயிற்சி சிறந்தது.  அதனால், 15 நிமிட நடைபயிற்சிக்கு பதில், அதனை கூட்டி 30 நிமிட நடைபயிற்சி செய்வது நல்லது என அவர் கூறியுள்ளார்.

எனினும் அதிர்ச்சிக்குரிய வகையில், சராசரி உடல் எடை கொண்ட ஆனால் வேறுபட்ட உடற்பயிற்சி அளவுகளை கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்பொழுது, அதிக எடை மற்றும் உடற்பருமனான நபர்களுக்கு இதய பாதிப்பு ஆபத்து அதிகளவில் காணப்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடற்பருமன் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்தவர்களாக இருந்தபோதிலும், அதிக கொலஸ்டிரால், நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் 4 மடங்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் 5 மடங்கு உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.

கூடுதல் உடல் எடை கொண்டவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, எதிர் விளைவுகளை ஈடு செய்யாது என்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த முடிவு தெரிய வந்துள்ளது என்றும் லூசியா கூறுகிறார்.  அதனால், சுகாதார கொள்கைக்கும் மற்றும் சீரான வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும், உடல் எடையை குறைப்பது என்பது முதன்மையான லட்சியம் ஆகவே இருக்க வேண்டும் என்றும் லூசியா கூறியுள்ளார்.