2021ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத்திட்டம் . பிரதமர் மகிந்த ராஜபக்ஷ

0
4
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை, 2021ம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டின் 75வது பாதீட்டினை இன்றையதினம் நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் முன்வைத்தார்.

இதில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரத்துக்கு பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக, பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் முழுமையான கிராமிய அபிவிருத்தி ஊடாக வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனையும், பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத்துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா 2ஆயிரம் மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1992ஆம் ஆண்டு பெருந்தோட்ட கம்பனிகள் தனியார் மயப்படுத்தப்பட்டதிலிருந்து 30 வருடங்களாக பாரியளவிலான பெருந்தோட்ட முகாமைத்துவம் தனியார் துறைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியும் சிறிய தேயிலை தோட்ட உற்பத்திகளிலிருந்து அதிகரித்துள்ள அதேவேளையில், பாரிய அளவிலான பெருந்தோட்டங்களின் பங்களிப்பு சுமார் 25 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

அத்தோட்டங்கள் பெரும்பாலானவற்றில் பயிர்ச்செய்கை பல்வகைப்படுத்தப் பட்டிருக்கவில்லை.

அதிகூடிய பெறுமதியை கொண்டுள்ள இலங்கையின் வர்த்தகச் சின்னம் உட்பட தேயிலையை ஏற்றுமதிக் கைத்தொழிலாக அபிவிருத்தி செய்திருப்பதும் ஒரு சில நிறுவனங்கள் மாத்திரமேயாகும்.

பெரும்பாலான நிறுவன்களின் தோட்டங்களில் பயிர் செய்யப்படாத காணிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மருத்துவமனை, பாடசாலை வீடு, பாதை, மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ள வாடகையை செலுத்தாத நிறுவனங்களும் இதனிடையே காணப்படுகின்றன.

அதேபோன்று நிறுவனங்களின் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதும் மிகக் குறைந்த நாளாந்த சம்பளம் ஆகும்.

இந்த நிலைமையின் கீழ் மிகவும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள தோட்ட கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், திருப்தியடைய முடியாத தோட்ட கம்பெனிகளின் தனியார் மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது.

அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021 ஜனவரி முதல் ரூபா ஆயிரம் வரை அதிகரிப்பதற்கும் முன்மொழியப்படுகிறது.

இந்த சம்பளத்தை செலுத்த முடியாத தோட்டக் நிறுவனங்களுடான முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அதேநேரம், புதிய பாதீட்டில் விசேட பொருட்கள் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயம், கால்நடைவளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் வருமான வரியை ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 50 சதவீத வருமான வரி சலுகை வழங்குவதற்கும், புதிய பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொவிட்19 பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினருக்கு, விசேட காப்புறுதி திட்டம் ஒன்றுக்கான யோசனையையும் பிரதமர் முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை தேயிலைச் செய்கைக்காக புதிய தொழில்நுட்ப முறை மற்றும் கால நிலைத் தாக்கத்தினைக் குறைக்கின்ற சேதன பசளை பாவனையினை பிரபல்யப்படுத்தல் என்பவற்றின்பால் விசேட கவனம் செலுத்தப்படப்படும்.

சிறிய இறப்பர் தோட்டங்களின் வருமான வழிகளை பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை இறப்பர் தொடர்பான கைத்தொழில்களின் மூலம் அத்துறையின் வருமானத்தினை அதிகரிக்க முடியுமாகவிருக்கும்.

தெங்கு காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அந்த காணிகளில் அகழிகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு முறைகள், சொட்டு நீர்ப்பாசன உபாயங்களைப் போன்று பசளைகளை இடுவதற்கும் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

உள்நாட்டு கித்துள் மற்றும் பனைக் கைத்தொழிலினை பல் வகைப்படுத்துவதன் மூலம் குறித்த உற்பத்தியினை ஏற்றுமதிச் சந்தையை நோக்கி அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கந்தளாய், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் கரும்பு செய்கையாளர்களுக்கு அதிக வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கரும்பு செய்கையினை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை சீனி நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவினை 70 ஆயிரம் மெற்றிக் டன்;களாக அதிகரிப்பதற்கு சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நவீன மயப்படுத்தல், எதனோல் மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை அதிகரிப்பதற்காக வடிசாலைகளை நவீனமயப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது

இலங்கையின் உண்மையான கறுவா ஏற்றுமதி, பயிர்ச் செய்கை மற்றும் செயன்முறைப்படுத்தல் வலயங்களை தாபிப்பதனை நோக்காகக் கொண்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்கீழ் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை விரிவாக்குவதற்கும் ஒதுக்கீடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

தேயிலை , தெங்கு , இறப்பர் , கறுவா போன்ற பிரதான பெருந்தோட்ட பொருளாதாரத்தை புத்துயிரளித்தல் பெருந்தோட்டத்துறையில் பல்வகைப் படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரதேச விவசாயிகளை இணைத்து கொண்டு இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 6 ஆயிரத்து 500 ஏக்கர்களில் மரமுந்திரிகையை பயிரிடுதற்கும் அப்பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கட்டத்தில் உளுந்து பயறு மிளகாய் போன்ற பயிர்களை பயிரிடுவதற்கும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சிறு தோட்ட உரிமையாளர்களை மரமுந்திரிகை பயிர்ச் செய்கையில் இணைத்துக் கொள்வதற்கு இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தேவையான தாவரங்களையும் விரிவாக்கற் சேவைகளையும் வழங்குகின்றது.

மிளகு , கிராம்பு ஏலக்காய் கோப்பி போன்ற பெருந்தோட்டப் பயிர்களில் உள்நாட்டு பெறுமதியை அதிகரிக்கின்ற தொழில்நுட்ப ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்கின்ற வர்த்தகர்களுக்கு தேவையான காணி மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக தீர்வை வரிச்சலுகை மற்றும் நிதி வசதிகளை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் சொத்து கடன்களுக்கான உட்சபட்ச வட்டி 7 வீதமாக குறைக்கப்படுகிறது.

அரச பணியில் உள்ள ஆண் பெண் இருபாலாருக்குமான ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக உயர்த்தப்படுகிறது.

தற்போது பெண்களுக்கான ஓய்வுபெறும் வயதெல்லை 55 ஆக உள்ளது.

மத்திய வங்கியின் வங்கியல்லா கண்காணிப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டு புதிய கட்டமைப்பு அமுலக்கப்படும்.

25 மில்லியன் ரூபா முதலீடு செய்யும் பாலுற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக்காக 5 வருட மூலோபாய வரிவிலக்கு, இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு 3 ஆண்டுகளாக வரி விலக்கு வழங்கப்படும்.

அதேநேரம், கொவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரங்களுக்கு விசேட காப்புறுதி திட்டம் ஒன்றும் அமுல்படுத்தப்படும் என பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 50 சதவீத வருமான வரிசலுகை வழங்கப்படும்.

இதேவேளை, விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற வாகன உதிரிப்பாகங்களுக்கான வரியும் நீக்கப்படவுள்ளது.

எதிரிசிங்ஹ ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மன்ட் பினான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக குறித்த நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக முழுமையான நிதி நிறுவனத் துறையையும் அச்சுறுத்தக் கூடிய, நிதி, வங்கி மற்றும் முழுப் பொருளாதார செயல்முறையையும் மறைமுகமாக பாதிக்கக் கூடிய மற்றும் நிதித் துறை தொடர்பான மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்கு வழிவகுக்கக்கூடிய முறைகேடுகளைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எனவே, மத்திய வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் மேற்பார்வை திணைக்களத்தை முழுவதுமாக மறுசீரமைக்கவும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின்படி நிதி நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான ஒரு நிறுவன கட்டமைப்பை வகுப்பதற்கும் பரிந்துரை செய்யப்படுகின்றது.

இந்தத் துறையினை ஒழுங்கு முறைப்படுத்துதல் சம்பந்தமான பெரிய பிரித்தானியாவிலும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சட்ட வரைசட்டகம் தொடர்பான விரிவான ஆய்வு ஒன்றை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது.

அதனால், அத்தகைய சட்ட வரை சட்டகம் ஒன்றை தயாரிப்பதற்காக நிபுணர் குழு ஒன்றை நினைப்பதற்கும், தொடர்புடைய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தாம் எண்ணியுள்ளதாகவும் பிரதமர் மஹி;ந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தத் துறையில் தற்போது வணிக ரீதியாக செயல்பட்டுவரும் நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் நிதி நிறுவனங்களை இணைப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ் 21 நிதி நிறுவனங்களை 10 நிதி நிறுவனங்களாக இணைத்தமை நிதி முறையை உறுதிப்படுத்துவதற்கு வழிவகுத்தது.

இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற இணைப்புகளை நடைமுறைப்படுத்தாமை மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பன பல நிதி நிறுவனங்கள் மூடப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள பாதீட்டின் படி, 2021 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் ஆயிரத்து 886 பில்லியன் ரூபாவாகும்

அரசாங்கத்தின் மொத்தச் செலவு 3 ஆயிரத்து 441 பில்லியன் ரூபா.

வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான துண்டுவிழும் தொகை ஆயிரத்து 555 பில்லியன் ரூபாவாகும்.