போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஆராய ஆணைக்குழு அமைக்க முடிவு

0
4
50 / 100

இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கவும், இலங்கையின் சார்பில் இம்முறை ஜெனிவா அமர்வில் யோசனை ஒன்றை முன்வைக்கவும் மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு மாற்று நடவடிக்கைகளைக் கையாளத் தீர்மானித்துள்ளது.

இதன்படியே குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இதன்போது குறித்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் குறித்தும் தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்த ஆணைக்குழு அடுத்துக் கூடவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையின் முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிதாக தீர்மானம் ஒன்றை வரையவும், அதனை ஜெனிவாவில் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக இலங்கை கையாளவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கெஹலிய மேலும் தெரிவித்தார்.